Friday, February 18, 2011

வல்லைவெளி முனியப்பர்

அண்மையில் குடா நாட்டிற்கு செல்லும் வாய்ப்புக் கிடைத்தது. யாழ் குடாநாடு இலங்கையின் வட பகுதியில் அமைந்துள்ள வெப்பவலயப் பிரதேசம்.

யாழ் மண்ணின் வளமே பனை என்றொரு காலம்....

கடற்கரையை அண்டிய கடலோரக் கிராமங்கள் தென்னந் தோப்புகள், மணலை அண்டிய சவுக்கங் காடுகள், பனங்கூடல்கள். வெங்காயம், கத்தரி, மிளகாய், மரவெள்ளி தோட்டங்கள், வயல் வெளிகள், புகையிலை எனப் பரந்து விரிந்து கிடக்கின்றன.

வரண்ட பூமி

பிரசித்திபெற்ற கோயில்களும் இங்கு பல அமைந்துள்ளன. சில இடங்களுக்கு உங்களையும் அழைத்துச் செல்லலாம் என நினைக்கிறேன்.

வல்லை முனியப்பர் கோவில் பின்வாயிலில் பிள்ளையார்

யாழ்ப்பாணம் பருத்தித்துறை ரோட்டின் தெருவோரத்தில் வல்லை வெளியில் வல்லை முனியப்பர் கோவில் இருக்கிறது.

பிரதேசம் மிகவும் வரண்ட பரந்த வெளியாகும். மழைக்காலங்களில் மட்டும் இவ்வெளிகளில் நீர் நிறைந்து கடல்போன்று இருக்கும்.

வல்லைப் பாலத்தருகே தொண்டைமனாற்றில் கூடடித்து இரால் பிடித்தல்
 இதற்கு அருகேயுள்ள தொண்டமனாற்றில் இரால் மீன்பிடியில் பலர் ஈடுபட்டிருப்பதைக் காணலாம். இரால் கூடுவைத்து அடைத்தும், சிறுவலை வீசிப் பிடித்தும் இராலைச் சேகரித்துக் கொள்வார்கள்.

வல்லை முனியப்பர் மிகவும் பழமையான கோவில். வாகனங்களில் செல்பவர்கள் உண்டியலில் காசு போட்டு கற்பூரம் கொழுத்தி வணங்கிச் செல்வார்கள்.

திருப்பணி உண்டியலில் காணிக்கை செய்வர்

அதீத நம்பிக்கை உள்ளவர்கள் வாகனத்திற்கு திருநீறு  பூசுவதையும் காணலாம்.

கற்பூரம் கொழுத்தி விபூதி பூசி...
இவ்வாறு வணங்காது சென்றால் தங்களது வாகனத்திற்கு அல்லது தமது பிரயாணத்திற்கு இடர் ஏற்படும் என்ற பயம் மக்களிடையே நீண்டகாலமாகப் நிலவி வந்துள்ளது. இன்னமும் அந்தப் பயம் முற்றாக நீங்கிவிட்டதெனச் சொல்ல முடியாது

ஆதியில் முனியடித்துச் செத்தார் என்றேல்லாம் பயமுறுத்துவார்கள். வெளியாக இருந்ததால் மாலையானால் தனியே செல்லப் பயப்படுவார்கள். சுற்றியுள்ள முட்புதர்களும், கிலி கொள்ள வைக்கும்.

ஈச்சம் பழங்கள் இருக்கின்றனவா என ஏங்கிய காலம் நினைவுக்கு வருகிறது.

ஈச்சம் பற்றைகள் மிகுதியாகக் காணப்பட்ட இடம். பாதையோரத்தில் ஈச்சம் பழங்கள் வெட்டுவோரைக் காணக்கூடியதாக இருக்கும். இப்பொழுது ஈச்சமரங்கள் குறைந்துவிட்டன. 

நள்ளிரவில் முனியப்பர் வெளிப்பட்டு உலாவுவார் என்பர். ஊளையிட்டபடி வாகனத்தை கடந்ததாகவும் கூறுவர். சனநடமாட்டம் அற்ற வெட்டவெளியில் வேகமாகக் காற்றடிக்கும் போது அவ்வழியே வாகனத்தில் சென்றால் வாகனத்தின் வேகமும், காற்றின் வீச்சும் ஒன்று கூடி பயத்தில் உறைந்திருப்பவருக்கு ஊளையாகக் கேட்டிருக்கலாம் என விஞ்ஞான ரீதியாகக் கருத்தும் கூறலாம்.

இரவில் கொள்ளிவாய்ப் பிசாசின் அட்டகாசம் அப்பகுதியில் இருந்ததாக பல வயதானவர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன். ஆயினும் சதுப்பு நிலத்திலிருந்து வெளிவரும் மீதேன் போன்ற வாயுக்கள் வெப்பத்தால் தீப்பிடிப்பதால்தான் அவ்வாறு நிகழ்ந்ததாக ஒருவர் விளக்கம் கூறினார்.

வல்லை முனியப்பருக்கு துணையாக பிள்ளையாரும் வந்துவிட்டார்
இவை எல்லாம்; மின்சாரம் இல்லா காலத்தில் பயமாகத்தான் இருந்திருக்கும்.

தொடக்காலத்தில் பெரிய மரத்தின் கீழ் சூலம் அமைக்கப்பட்டு வணங்கினார்கள். பின்னர் படிப்படியாக மாற்றமுற்று இப்பொழுது பிள்ளையாருக்குக் கோவில் அமைக்கப்பட்டுள்ளது.

போரில் சிதைந்த வல்லைப் பாலம் புதுக்கோலம் பெறுகிறது
மழைக்காலத்தில் இப்பகுதி கண்ணுக்கு விருந்தளிக்கும். பல வகைப் பறவைகளைக் கூட்டம் கூட்டமாகக் காணலாம். குளிர்ப் பிரதேசங்களிலிருந்து புலம்பெயரும் பறவைகள் அவையாகும்.

மாதேவி

13 comments:

  1. உங்கள் பதிவையும் S.Sudarshanனின் பேய்கள் - விஞ்ஞான விளக்கம் பற்றிய பதிவையும் கருத்தொற்றுமைக்காக எனது Facebook ல் பகிர்ந்துள்ளேன்.

    ReplyDelete
  2. வாருங்கள் Dr.எம்.கே.முருகானந்தன். எனது பதிவை பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றி.

    சுதர்சனின் பதிவு பார்கின்றேன்.

    ReplyDelete
  3. நல்ல பதிவு.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. படங்களும் பதிவும் நன்று. தொடர வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  5. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி U.P.Tharsan.

    ReplyDelete
  6. இன்னமும் அந்தப் பயம் முற்றாக நீங்கிவிட்டதெனச் சொல்ல முடியாது//
    still alive???

    ReplyDelete
  7. படங்கள் எல்லாம் அழகு.
    இயற்கை சூழ அமைந்த வல்லைவெளி முனியப்பர் கோயிலை எங்களுக்கு பகிர்ந்ததற்கு நன்றி மாதேவி.

    ReplyDelete
  8. இன்றுதான் தங்கள் பதிவுக்குள் நுழைந்தேன்
    ஒவ்வொரு பதிவையும் மிகுந்த அக்கறையுடன்
    செய்துள்ளீர்கள்.தங்கள் பதிவைத் தொடர்வதில்
    பெருமை கொள்கிறேன்
    சும்மாவை ஏன் சும்மா வைத்துள்ளீர்கள்

    ReplyDelete
  9. வாருங்கள் இராஜராஜேஸ்வரி.

    எதற்கு வம்பு என ஒருவராவது வாகனத்தைவிட்டு இறங்கி வணங்கிவிடுவார்கள்.

    ReplyDelete
  10. மிக்க நன்றி கோமதிஅரசு.

    ReplyDelete
  11. வாருங்கள் ரமணி. மிக்க மகிழ்ச்சி.

    சும்மா என்ற பெயர்வைத்ததால்போலும் அது அப்படியே இருக்கு :)

    ReplyDelete
  12. நான் பார்க்க விரும்பும் தேசம்.. ம்ம்..
    எப்ப வாய்க்குமோ..

    ReplyDelete